அரச வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள் அடுத்த வருடம் நிரந்தரமாக்கப்பட்ட பின்னர், அனைத்து பிரதேச செயலகங்களிலும் உதவி தகவல் உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளனர்.
இத்தகவலை ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார் . அதன்படி 340 பேர் இவ்வாரு நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் பிரதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அப்பிரதேசங்களில் காணப்படும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை சரியான முறையில் பெற்றுக் கொண்டு அவற்றை மக்கள் அறியும் நோக்கில் அறிக்கையிடல் இந்த நியமனம் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதேச ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் பல பிரதான பிரதான ஊடகங்கள் பலவற்றின் கவனத்திற்கு தென்படாமல் காணப்படுகின்றது.
அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த உத்தியோகத்தர்கள் மூலம் சரியான முறையில் தகவல்களை பெற்றுக்கொண்டு அவற்றை தேசிய ரீதியாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது.
இதன் மூலம் மக்களுக்கு குறித்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களின முக்கியத்துவம் மற்றும் வெளிப்படைத்தன்மை என்பவற்றை அறியும் வாய்ப்பு ஏற்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டு 22 வருடம் நிறைவு பெற்றுள்ளதனை முன்னிட்டு மாவட்ட ஊடகப்பிரிவுகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கண்டியில் நடைபெற்ற விசேட பயிற்சி செயலமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாவட்ட ஊடகப்பிரிவை வலுப்படுத்தும் நோக்கில் 10 புகைப்பட கருவிகள் 10 மாவட்ட ஊடகப்பிரிவுகளுக்கு இதன்போது அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.