ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை விடயத்தில் மறுக்கப்பட்ட நீதி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை விடயத்தில் சர்வதேச நாடுகள் மீது கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சார்பாக உலக நாடுகளோ, சர்வதேச அமைப்புகளோ நீதியை பெற்றுத் தரவில்லை என அவர் கூறியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கத்தின் 15 ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு முகப்புத்தக சமூக வலைத்தளத்தில் பா.அரியநேத்திரன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உலக நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் அனுதாப கவலையை மாத்திரமே வெளியிட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனநாயகப் பண்புகளுக்கமைய நாடாளுமன்றம் சென்று அடிவாங்கிய வரலாறு தமிழினத்திற்கு நிறையவே உண்டு. காலிமுகத்திடலில் அமைதியாக சத்தியாகிரகம் மேற்கொண்ட தமிழ் தேசிய மக்கள் பிரதிநிதிகள் மீது தடியடிப்பிரயோகம் செய்த வரலாறு காணப்படுகிறது.

2004 தொடக்கம் 2009, வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் உட்பட மாமனிதர் ரவிராஜ், மாமனிதர் சிவனேசன், ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வரலாறு ஊடாக இலங்கையின் ஆட்சி எப்படிப்பட்டது என்பதை சர்வதேசம் புரியவேண்டும்.

மணலுள் தலை புதைத்த தீக்கோழிகளாய் உண்மையான களநிலையைக் காணமறுக்கும் அல்லது மறக்கும் சர்வதேச அபிப்பிராயம் குறித்த கவலைகளை ஒதுக்கிவிட்டு மண்ணுக்காய் மதித்தவர்களின் அபிலாசைகளைக் கணக்கிலெடுத்து முன்னகர்வதே நாம் அவர்களுக்குச் செய்யும் இதயபூர்வமான அஞ்சலியாகும் என அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை