நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் வைத்து வெளியிடப்பட்டது.
முதலில் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவினால் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து டலஸ் அழகப்பெருமவினால் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கி வைக்கப்பட்டது. 45 ரூபாய் மற்றும் 15 ரூபாய் பெறுமதியான முத்திரைகளே இவ்வாறு வெளியிடப்பட்டன.
சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பிரிவில் முத்திரை வடிவமைப்பு போட்டியில் வெற்றிபெற்ற கந்தானை புனித செபஸ்தியன் மகா வித்தியாலயத்தின் நிமேஷ் சமத் பெரேரா என்ற மாணவன் மற்றும் நுகேகொட அனுலா வித்தியாலயத்தின் ஷினாலி ருவண்யா பீரிஸ் என்ற மாணவி ஆகியோரின் சித்திரங்களை கொண்டதாக இம்முறை நத்தார் தின நினைவு முத்திரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
புனித செபஸ்தியன் மகா வித்தியாலயத்தின் நிமேஷ் சமத் பெரேரா என்ற மாணவனினால் வரையப்பட்ட பிரதமரின் உருவப்படம் இதன்போது அம்மாணவரினால் பிரதமருக்கு வழங்கப்பட்டது. கனிஷ்ட பிரிவில் வெற்றிபெற்ற நுகேகொட அனுலா வித்தியாலயத்தின் ஷினாலி ருவண்யா பீரிஸ் என்ற மாணவியும் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டிருந்தார். கங்காராம விகாராதிகாரி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் மற்றும் கலாநிதி செக்டஸ் குருகுலசூரிய மற்றும் பர்ட்ரம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பிரதமரின் மத விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் எம்.கே.ரத்னாயக்க, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, பிரதி தபால்மா அதிபர் ராஜித கே.ரணசிங்க, முத்திரை பணியகத்தின் பணிப்பாளர் சாந்த குமார மீகம, கிறிஸ்தவ விவகார திணைக்களத்தின் பணிப்பாளர்களான சதுரி பின்டோ மற்றும் மாதவீ திவ்யாஞ்சலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




