உந்துருளி மரத்தில் மோதி விபத்து

தம்புள்ளை – களுந்தேவ – பரணகம பிரதேசத்தில் உந்துருளி விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த உந்துருளி வீதியைவிட்டு விலகி மரமொன்றுடன் மோதிக் கால்வாயில் வீழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இரண்டு உந்துருளிகளில் ஆறு மாணவர்கள் நேற்று (28) பிற்பகல் தம்புள்ளை – களுந்தாவ கால்வாய் வீதியில் நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன்போது, விபத்துக்குள்ளான உந்துருளியில் பயணித்த மூன்று மாணவர்களில் ஒருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அதில் பயணித்த மற்றைய மாணவர் சம்பவ இடத்திலிருந்து, களுந்தேவ கால்வாயில் சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தம்புள்ளை பஹல அரவுல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதான மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை