அடுப்பில் இருக்க வேண்டிய நெருப்புக்கு பதிலாக மக்களுக்கு நெஞ்சுக்குள் நெருப்பு மாத்திரமே உரித்தாகி இருப்பதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நத்தாருக்கு முன்னதாக எரிபொருள் விலைகளை அதிகரித்து அரசாங்கம் அருமையாக நத்தார் பரிசை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாலங்கொடை நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறியுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மக்களுக்கு அருமையான நத்தார் பரிசை வழங்கிய அரசாங்கம், இறுதியாக கையிருப்பில் இருக்கும் டொலர்களை செலவு செய்து, கடன் தவணை செலுத்தி, மக்களுக்கு புத்தாண்டு பரிசை வழங்கும்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டொலர் மாஃபியாவின் வஞ்சகர். அவர் நாட்டு மக்களுடனும் ஏற்றுமதியாளர்களுடனும் விளையாடி வருகிறார்.
நாட்டின் பொருளாதார அழிவுக்கு காரணமாக இருந்த நபர் ஒருவர் பதவி விலகியுள்ளார். அவரே பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பொருளாதார அழிவுக்கான பிரதான சூத்திரதாரி.
எது எப்படி இருந்த போதிலும் நாட்டின் பொருளாதார அழிவுக்கான குற்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய அவர், அதில் இருந்து தப்பிச் செல்ல முடியாது.
நாட்டுக்கு பெரும் சாபத்தை கொண்டு வந்து சேர்த்துள்ள அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களிடம் செல்ல முடியாத நிலைமை உருவாகியுள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.