ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குமாறு கோரி தனது உயிரை ஈகம் செய்த முத்துக்குமாரின் 13ஆம் ஆண்டு நினைவு

தமிழர் தாயகத்தின் மீது 2009 ஆம் ஆண்டு மிக கொடுரமான போர் இடம்பெற்ற போது அந்தப் போரை நிறுத்தி ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குமாறு கோரி தமிழக தலைநகர் சென்னையில் தீக்குளித்து தனது உயிரை ஈகம் செய்த முத்துக்குமாரின் 13 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று(29) அனுஷ்டிக்கப்படுகிறது.

தமிழக தலைநகர் சென்னையில் உள்ள இந்திய மத்திய அரசின் சாஸ்திரி பவனுக்கு அருகில், தமிழர் தாயகத்தின் மீது மிக கொடூரமான போரை நிறுத்தி ஈழத்தமிழர்களுக்கு நீதிவழங்குமாறு கோரி 29 வயதான முத்துக்குமார் தீக்குளித்து தனது உயிரை ஈகம் செய்திருந்தார்.

தனது தற்கொடை தொடர்பாக தானே எழுதிய கடிதத்தை எந்தவிதப் பதற்றமும் இல்லாமல், மக்களிடம் விநியோகித்துவிட்டு, ஈழத்தமிழர்களை காப்பாற்றக்கோரி முழக்கமிட்டுவிட்டு தனது உடலில் எரிநெய்ஊற்றி தீ மூட்டியிருந்தார்.

தமிழர் தாயகத்தில் தன் இன மக்கள் கொத்துக்கொத்தாகக் கொலை செய்யப்படுவதைப் பொறுக்க முடியாமல், பெண்கள், குழந்தைகள் துயருறுவதை சகிக்க முடியாமல் தான் இந்த தற்கொடையை செய்வதாகவும் அவர் உணர்வுமயமாக அறிக்கையிட்டிருந்தார்.

அதுவரையில் அரசியல் கட்சிகள் சட்டக்கல்லூரி மாணவர்கள், மற்றும் வழக்கறிஞர்களே ஈழத் தமிழர்களுக்காக நீதி கேட்டு போராடிய நிலையில் முத்துக்குமாரின் தற்கொடை மரணத்தின் பின்னர் தமிழகத்தின் இளைய சமூகத்தின் போராட்டம் தீவிரமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை