முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில், தனியார் ஒருவரின் தென்னங்காணி ஒன்றில் உள்ள கிணற்றில் இருந்து, இளம் குடும்ப பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், பூதன்வயல் கிராமத்தில் வசித்து வந்த 36 வயதுடைய யோகராசா றாஜினி என்ற இளம் குடும்ப பெண் என, அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 4 ஆம் திகதியில் இருந்து, குறித்த பெண்ணை காணவில்லை என, உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
திருமணமாகி இரண்டு வயது வந்த பிள்ளைகள் உள்ள நிலையில், கணவரை பிரிந்து, இன்னொரு ஆணுடன் குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
22 வயதுடை ஆணும் 16 வயதுடைய பெண் பிள்ளைகளும் உள்ள நிலையில், முதற் கணவர், தட்டையர்மலை முத்துஜயன்கட்டில் வசித்து வந்துள்ளார்.
தாயின் பராமரிப்பில் பிள்ளைகள் இல்லாத நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, கிளிநொச்சியை சேர்ந்த ஆண் ஒருவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
சொந்த வீடு இல்லாத நிலையில், பற்றையால் சூழப்பட்ட காணி ஒன்றில், ஒரு சிறிய குடிலிலேயே, இவர்கள் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
உயிரிழந்தவரின் கைப்பை ஒன்று, தென்னங் காணிக்குள் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து, சடலம் கிணற்றினுள் இருப்பது இனம்காணப்பட்டது.
சம்பவம் தொடர்பில், முள்ளியவளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்ட மருத்துவர் பி.நிலுசன், தடயவியல் பொலிசார் ஆகியோர் முன்னிலையில், சடலம் மீட்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனைக்காக, சடலம், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.