ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நாளை ஆரம்பம்

2021 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஒரு மாதம் மற்றும் 10 நாட்களுக்கு வெளிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை கடந்த 22 ஆம் திகதி நடாத்தப்பட்டது.

இந்த நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, சாதாரண தர மாணவர்கள் உயர்தர கல்விக்கு உள்வாங்குவதற்கு எடுக்கும் காலத்தை குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் தினேஸ் குனவர்தன குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை