மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் உள்ள தனது காணியினை துப்பரவு செய்வதற்காக மட்டக்களப்பு மாநகர சபையின் ஊழியர்களை கடமை நேரத்தில், மாநகர ஆணையாளர் மா.தயாபரன் அவர்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகின்றமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்து அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் இன்றைய தினம் (24.02.2022) பி.பகல் 12.30 மணியளவில் மாநகர சபையின் கௌரவ உறுப்பினர்கள் சிலருடன் களுவாஞ்சிக்குடியில் உள்ள ஆணையாளரின் குறித்த காணிக்கு விஜயம் செய்திருந்தோம் என மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்:-
அவ்வேளை அங்கு இரு ஊழியர்கள் காணியினை துப்பரவு செய்து கொண்டிருப்பதனை எம்மால் அவதானிக்க முடிந்ததுடன், அது தொடர்பில் அவர்களை வினாவியபோது மாநகர ஆணையாளர் மற்றும் தமது சுகாதார மேற்பார்வையாளர் அகியோர் இப்பணிக்காக தம்மை அனுப்பி வைத்ததாக தெரிவித்தனர்.
மேலும் இன்றைய தினம் காலை 06.43 மணிக்கு சம்மந்தப்பட்ட இரு ஊழியர்களும் அலுவலகத்திற்கு வருகை தந்து வரவுப் பதிவேட்டில் தமது கையொப்பத்தினை இட்டு உறுதிப்படுத்தியிருந்த போதும் சம்பவம் இடம்பெற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த போதும் பிற்பகல் 12.45 பின்னர் அவர்கள் அலுவலகத்திற்கு வரவில்லை என வெட்டி மாற்றப்பட்டுள்ளது.
அத்துடன் சுகாதார மேற்பார்வையாளர் உடன் தொலைபேசியில் கலந்துரையாடி சம்பவத்தை திரிவுபடுத்தும் முயற்சியிலும் ஆணையாளர் ஈடுபட்டுள்ளார். இருந்தும் கைவிரல் அடையாளப் பதிவு எம்மால் பெறப்பட்டுள்ளது.
மாநகர பதில் ஊழியா்களின் சம்பளம் நாளது அடிப்படையில் மாநகர வாழ் மக்களின் வரிப்பணத்தில் ஊடாக வழங்கப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு தனது தனிப்பட்ட தேவைகளுக்காக ஊழியர்களை பயன்படுத்தி வருகின்றமை முறையற்ற செயற்பாடாகும்.
எனவே இதற்குரிய நடவடிக்கைகளை சபையின் ஊடாகவும் மேற்கொள்ளவுள்ளதோடு இதற்கு மேலதிகமாக கிழக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் நியமன அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.
