கல்முனை காவல்துறையினர் - காரில் கேரள கஞ்சா கடத்திய இருவரை கைது செய்துள்ளனர்

கேரளா கஞ்சாவினை அதி சொகுசு காரில் கடத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேக நபர்களை கல்முனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் இன்று புதன்கிழமை(23) மதியம் கல்முனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நீண்ட காலமாக கேரளா கஞ்சா வாகனங்களின் மூலம் கடத்தப்பட்டு விற்பனை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கல்முனை காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பெரியநீலாவணை பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பு காவலரணில் பாதுகாப்பினை பலப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில் பொலனறுவை பகுதியில் இருந்து பொத்துவில் நோக்கி அதி சொகுசு காரில் 10 கிலோக்கும் அதிகமான கஞ்சா பொதிகளுடன் பயணம் செய்த இரு சந்தேக நபர்களை காவல்துறை மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனையில் கைப்பற்றப்பட்டது.

கல்முனை பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் ரி.எச்.எம். லசந்த புத்திகவின் நெறிப்டுத்தலில் கல்முனை காவல் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி எம் .ரம்சின் பக்கீர் வழிகாட்டலில் துரிதமாக செயற்பட்ட பிரதம காவல்துறை பரிசோதகர் அலியார் றபீக் குழுவினர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த காரினை தடுத்து நிறுத்தி திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதில் பயணம் செய்த இரு சந்தேக நபர்கள் மற்றும் ரூபா 3 இலட்சத்திற்கும் அதிகமான பணம் 4 கைத்தொலைபேசி உள்ளிட்ட சான்று பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இவ்வாறு கைதாகிய 27 மற்றும் 28 வயதுடைய சந்தேக நபர்கள் உட்பட மீட்கப்பட்ட சான்று பொருட்கள் காவல் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு மேலதிக விசாரணைகளை கல்முனை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை