வெளிநாட்டு கையிருப்பு மேலும் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உறுதியான தீர்வொன்றை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் சில ஒன்றிணைந்து கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம், ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன ஆகியோர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

அத்துடன், லங்கா சம சமாஜக் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர். சம்பந்தன், MA சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் மனோ கணேசன் மற்றும் ஏனைய கட்சிகளின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவூஃப் ஹக்கீம் ஆகியோர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவின் கையொப்பத்துடனும் இந்த விசேட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அதனுடன் தொடர்புடைய 4 முக்கிய சவால்கள் தொடர்பில் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் சர்வதேச நிதிச் சந்தைகளில் இருந்து கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை இலங்கை இழந்தமை முதலாவது காரணியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு ஒரு மாதத்திற்குத் தேவையான இறக்குமதிக்குக் கூட போதுமானதாக இல்லை என்பது இரண்டாவது காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் மிகக் குறைவான வெளிநாட்டு நாணய கையிருப்பு காணப்படும் சந்தர்ப்பம் இதுவாகும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2020 ஆம் ஆண்டில் அரச வருமானத்தில் 70 வீதம் கடன் செலவாக அமைந்துள்ளதுடன், கடந்த இரண்டு ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மொத்த அரச கடன் 95 வீதத்தில் இருந்து 120 வீதமாக அதிகரித்துள்ளதாக ஏனைய இரண்டு காரணிகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரணிகளில் நாட்டின் பாரிய பொருளாதார சவால்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பாரிய பொருளாதார சவால் ஏற்பட்டுள்ளமையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் சில ஒன்றிணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த இக்கட்டான தருணத்தில், நாடு என்ற வகையில் அனைவரும் ஒன்றிணைந்து இந்த பொருளாதார சவால்களை முறியடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நல்லாட்சி அரசாங்க காலத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணை முறி மோசடி மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் ஊழியர் சேமலாப நிதியின் மீதான 25 வீத வரி ஆகியவற்றுக்கிடையில்  வித்தியாசங்கள் எதுவும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்குக் கருத்துரைத்த மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுனில்-
இந்த நிலையில், வெளிநாட்டு கையிருப்பு மேலும் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள  அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, 2020 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது தற்போது வெளிநாட்டு கையிருப்பு 60 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதமளவில் 813 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட வெளிநாட்டு கையிருப்பு தற்போது 325 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் டொலர் பற்றாக்குறை காணப்படுகின்ற போதும் இலங்கையின் இறக்குமதி 2021 ஆம் ஆண்டு 28 தசம் 5 வீதத்தினால் அதிகரித்து 20 தசம்  6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் இறக்குமதி கடந்த வருடம் 24 தசம் 5 வீதமாக அதிகரித்து 12 தசம் 5 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, 2020 ஆம் ஆண்டில் 6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தக இடைவெளி 8 தசம் 1 பில்லியன் அமெரிக்க  அதிகரித்துள்ளது.

சுற்றுலாத்துறையின் வருமானம்  2020 ஆம் ஆண்டு  682 மில்லியன் அமெரிக்க டொலர்களாக  மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், 2021 ஆம் ஆண்டில் 261 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.  

இதன்படி, சுற்றுலாத்துரை வருமானம்  2020 ஆம் ஆண்டுடன்  ஒப்பிடும் போது, 2021 ஆம் ஆண்டில்  61 தசம் 7 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் எரிபொருள் விலை  20 வீதத்தினால்  அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.    

ரஷ்யா மற்றும் யுக்ரை ஆகிய  நாடுகளுக்கிடையிலான சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தை அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி,  தரமான மசகு எண்ணை பீப்பாய் ஒன்று   3 தசம் 3 வீதத்தினால் உயர்வடைந்துள்ள நிலையில், அதன் விலை  94 தசம் 44 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

அத்துடன், அமெரிக்க மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3 தசம் 6 வீதத்தினால் உயர்வடைந்து 93 தசம் 10 டொலராக அதிகரித்துள்ளது.
இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பது தொடர்பில்  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நட்டத்தினை குறைப்பதற்காக இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  

அத்துடன், எரிபொருள் விலை அதிகரிப்பது தொடர்பில் முன்னதாக  முன்வைக்கப்பட்ட  கோரிக்கைக்கு அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை எனவும்   அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, அரசாங்கம் குறித்த கோரிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கும் நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நட்டத்தினை குறைக்க முடியுமென அதன்  தலைவர் சுமித் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை