மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 452மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.
வெளியான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டு 433 மாணவர்கள் சித்தியடைந்திருந்த நிலையில் 2021ஆம் ஆண்டு தோற்றிய மாணவர்களில் 452 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் 65 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதுடன் கல்வி வலயத்தில் அதிக மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல்பெற்று சித்தியடைந்த பாடசாலையாகவுள்ளது.
இதே போன்று வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் 52மாணவிகளும்,சிசிலியா பெண்கள் பாடசாலையில் 57மாணவிகளும்,புனித மைக்கேல் கல்லூரியில் 54மாணவர்களும் மத்திய கல்லூரியில் 47மாணவர்களும் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
கல்வி கோட்டத்தின் அடிப்படையில் மண்முனை வடக்கு கோட்டத்தில் 364 மாணவர்களும் மண்முனைப்பற்று கோட்டத்தில் 73மாணவர்களும் ஏறாவூர்ப்பற்று கோட்டத்தில் 15மாணவர்களும் வெட்டுப்புள்ளிக்கு மேல்பெற்று சித்திபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
