தாக்குதலை நடாத்திய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

தாக்குதலை நடாத்திய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உக்ரைன் யுத்தத்தை பெரிதாக நோக்கும் ஐ.நா. அதைவிடப் பாரதூரமான பிரச்சினையாக உள்ள எமக்கான தீர்வை வழங்க வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மட்டுவில் பகுதியில் காவல்துறையினரின் தாக்குதலில் காயமடைந்து வீட்டில் சிகிச்சையில் உள்ள மரியசுரேஷ் ஈஸ்வரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மட்டுவில் என்னும் பகுதியில் மஹிந்த ராஜபக்ச வருகை தருவதாக அறிந்து, அவரிடம் தான் எங்களுடைய உறவுகள் கையளிக்கப்பட்டார்கள் என்பதை தெரிந்து,
அவரிடம் நீதி கேட்பதற்காக சென்ற போது நாங்கள் திட்டமிட்டு மறிக்கப்பட்டு முல்லைத்தீவிலிருந்து வாகனத்தில் செல்லும்போது இங்குள்ள புலனாய்வாளர்கள் எங்களுடைய பேருந்துகளை படமெடுத்திருந்தார்கள்.

அதை நான் கவனித்திருந்தேன், அவ்வாறு நாங்கள் சென்று கொண்டிருந்தபோது மட்டுவில் அம்மன் கோயிலுக்கு முன்பாக எங்களுடைய பேருந்து மறிக்கப்பட்டிருந்தது. 

மறித்த போது பேருந்து சாரதியை இறக்கி மிரட்டிய போது பேருந்து இருந்து கீழே இறங்கி நாங்கள் தான் வாடகைக்கு அழைத்து கொண்டு வந்தோம் என கூறிய போது அந்த இடத்தில் இருந்த காவல்துறை பெரியவர் என்னை கன்னத்தில் அறைந்தார்.
அடித்தவுடன் எனக்கு தலையே சுற்றியது இயலாத நிலைமை ஏற்பட்டிருந்தது,  அந்நிலையில் அவர்கள் எங்களுடைய பேருந்தினுடைய இரண்டு கதவுகளையும் அடைத்து அம்மாமாரை உள்ளே சிறைப்பிடித்திருந்தனர்.

எங்களுடைய பேருந்தை கொண்டு சென்று எரிக்குமாறு காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். அந்த வேளையில இவ்வாறு பேருந்தை கொண்டு செல்ல விடக்கூடாது என்பதற்காகவே நான் அதற்குப் பின்புறமாக குறுக்கே விழுந்து பேருந்தை எடுக்க விடாமல் தடுத்தேன். 

இவ்வாறான நிலையிலேயே நாங்கள் அவர்களுடன் வாக்குவாதப் பட்ட நிலைமையில் காவல்துறையினர் என் மீது சரமாரியான தாக்குதல்களை நடத்தி எனது ஆடைகளைக் களைய முற்பட்டு சப்பாத்துக் கால்களாலும் என் மீது தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

அந்த இடத்தில் தான் நான் காயப்பட்டிருந்தேன் இவ்வாறு 20 ஆம் திகதி பிரச்சனை முடிந்து வீடு வந்த போது எனக்கு சத்தி இயலாத நிலைமை ஏற்பட்ட நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தேன்.

22 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று வைத்தியசாலை சென்ற நிலையில் எனக்கு கழுத்து மற்றும் கை பகுதிகளில் இயலாத நிலை உள்ளதை மீண்டும் வைத்தியசாலை உறுதிப்படுத்தி இப்போது சிகிச்சையில் உள்ளேன்.
 
30 ஆம் திகதி மீண்டும் வைத்தியசாலைக்கு வருமாறு பணித்தனர், நாங்கள் எங்களுடைய உறவுகளை தேடியே இந்த போராட்டத்தை மேற்கொள்கின்றோம், நாங்கள் நீதி கேட்டு போராடுகின்றோம்.

அவர் இங்கு வரும் போது நாங்கள் அவரிடம் நீதி கேட்டு செல்வதற்கு எங்களுக்கு உரிமை இருக்கின்றது, ஆனால் நாங்கள் அவரிடம் வழியில் நின்று நீதி கேட்பதற்காகவே சென்றிருந்தோம்.

இவ்வாறான நிலையில் இந்த காவல்துறையினரால் செய்யப்பட்ட அட்டகாசம் பாதிக்கப்பட்ட பெண் என்ற அடிப்படையில் எங்களுடைய உடுப்புகளைக் கூட இழுத்து ஒரு அசிங்கமான செயற்பாட்டை புரிந்திருக்கிறார்கள்.

இதனை நீங்கள் ஊடகங்கள் ஊடாக நேரடியாகக் கண்டிருப்பீர்கள் இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்த விடயங்களைச் செய்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

எமக்கான நீதி வேண்டும், நான் கூலி வேலைக்கு சென்று எனது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துகிறேன் இன்று இவ்வாறு இயலாத நிலையில் இருக்கின்ற போது நான் என்ன செய்வது, எனக்கு நீதி இல்லை எனக்கு ஒரு சித்திரவதை செய்யப்பட்டிருக்கின்றது.

இதற்கு ஒரு நீதி இல்லை ஒரு தீர்வு வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். 

புதியது பழையவை