மீண்டும் இலங்கைக்கு உதவ முன்வரும் - தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைப்பதற்கு அனுமதி வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

உணவுப் பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு, விசேடமாக தமிழர்களுக்கு குறித்த மனிதாபிமான உதவிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள், கொழும்பு மற்றும் பெருந்தோட்டப் பகுதிகள் ஆகியவற்றுக்கு குறித்த உதவிகளை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து குறித்த மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளதாகவும், இதற்கு அனுமதி வழங்குமாறும் இந்திய மத்திய அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு இது தொடர்பில் கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த மார்ச் 31 ஆம் திகதி குறித்த விடயம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உணவு வகைகள், தானியங்கள், காய்கறிகள் மற்றும் மருந்துகளை இலங்கைக்கு வழங்குவதற்கான கடப்பாடு தமிழ்நாடு அரசாங்கத்துக்கு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், குறித்த நடைமுறையை விரைவில் எளிதாக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.
புதியது பழையவை