அண்டை நாடு என்ற வகையில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்கத் தயாராக உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்துக்கு விஜயம் செய்துள்ள அவர் சென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிதி ரீதியான உதவிகள், எரிபொருள், உணவு, மருந்துகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்கள் ஆகியன குறித்த உதவியில் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை தற்போது நெருக்கடியான நிலைமையின் ஊடாக பயணித்து வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவின் பல நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் இலங்கைக்கு தமது உதவிகளை வழங்கியுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ் மக்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார மீட்சி, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்காக இலங்கை மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ்ப்பாணத்துக்கு முதல் முறையாக விஜயம் செய்த பிரதமர் என்ற வகையில் தனது விஜயத்தை ஒருபோதும் மறக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக இந்திய அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரம், போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் கலாச்சாரம் ஆகிய விடயங்களை இந்த திட்டங்கள் உள்ளடக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
