மண்டூர் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மோசடி - நடவடிக்கை மேற்கொள்ள பிரதேச செயலாளரிடம் கோரிக்கை !

மட்டக்களப்பு மாவட்டம் மண்டூர் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இரு தினங்களுக்கு முன்னர் எரிபொருள் வழங்குவதில் அரச திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரின் செயற்பாட்டால் குழப்பநிலை ஏற்பட்ட சம்பவம் பிரதேச வாசிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏந்படுத்தியுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் குறித்த எரிபொருள் நிலையத்திற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்ட டீசலினை இலகுவான பொறிமுறையின் மூலம் வழங்கவேண்டும் என பிரதேச செயலாளரின் உத்தரவு இந்நிலையில் இரு தினங்களாக நீண்ட வரிசையில் காத்திருப்பவர்களுக்கு அப்பிரதேசத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் பிரதேச செயலாளரினால் நியமிக்கப்பட்டிருந்தார்.அவர் ஊடாக வழங்கப்பட்ட டீசலினை தனக்கும் அவர் சார்ந்த நபர்களுக்கும் வழங்கியதனால் வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்குமிடையில் குழப்ப நிலை ஏற்பட்டதாக அங்கு காத்திருந்த பிரதேசவாசிகள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த எரிபொருள் நிலையத்தின் உரிமையாரும் அங்கு சேமித்து வைக்கப்படும் எரிபொருள்களை இரவு வேளைகளில் மின் விளக்குகளை அணைத்து அதிகமான விலைகளுக்கு தனது சார்ந்தவர்களுக்கு விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

இவ்விடயம் பற்றி வெல்லாவெளி போரதீவுப்பற்று பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த எரிபொருள் நிலையத்தில் வருகின்ற எரிபொருளை அந்த பிரதேசத்தை அண்டிய அனைவருக்கும் சமமான முறையில் வழங்கவேண்டும் என அங்கு கடமையில் இருக்கின்ற அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தான் அறிவுரை வழங்கியதாகவும் அன்றைய தினத்தில் இடம்பெற்ற சம்பவம் பற்றி விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
புதியது பழையவை