சிங்கப்பூர் பயணமாகவுள்ளார் வெளிவிவகார அமைச்சர்

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G L பீரிஸ் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் நோக்கி பயணமாகவுள்ளார்.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் விடுத்த அழைப்புக்கு அமைய அவர் சிங்கப்பூருக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இதற்கமைய அவர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை பயணமாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், இந்த விஜயத்தின் போது சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் G L பீரிஸ் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சிங்கப்பூர் நிதியமைச்சர் லோரன்ஸ் வோங், நீதி மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கே ஷண்முகம் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளுடனும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் G L பீரிஸ் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 19 ஆவது ஐ.ஐ.எஸ்.எஸ். ஷங்ரி-லா ஆசிய பாதுகாப்பு உச்சி மாநாட்டிலும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G L பீரிஸ் பங்குபற்றவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் வெளிவிவகார அமைச்சர் G L பீரிஸ் இந்த உச்சி மாநாட்டில் பங்குபற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த உச்சி மாநாட்டுக்கு மேலதிகமாக ஜப்பான் பிரதமர், கட்டார் துணைப் பிரதமர், பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர், பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதி மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய பணிப்பாளர் ஆகியோருடன் இருதரப்பு சந்திப்புகளிலும் அவர் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை