ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் எதிர்பார்ப்புக்களை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் செயலகத்தில் இன்று(06) நடைபெற்ற அரசியல் கட்சி செயலாளர்களுடனான கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மாகாணசபை தேர்தல் நடத்தப்படாமல் தாமதமாவதன் காரணமாக மாகாணங்களை அதிகாரிகள் நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு ஏற்பட்டிருக்கின்றது.
மக்கள் இதனால் வாழ்வாதாரம் வேலைவாய்ப்பு, இடமாற்றம், உள்ளிட்ட அடிப்படை சேவைகளை பெறுவதில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிக்கு இவையும் புறக்காரணங்களாக அமையலாம்.
அதேவேளை முறையான வளங்கள் முகாமை செய்யப்பட வேண்டிய தேவைப்பாடும் இருக்கின்றது.
பல தரப்பினர் மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து வருகின்றனர்.
மேலும், உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆட்சி காலம் முடிவடைந்ததும் உரியகாலத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
அப்போதுதான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து இருக்கின்ற மக்களின் ஜனநாயகத் தன்மை பாதுகாக்கப்படும்.

