கதை சொல்லும் கலைஞர் மாஸ்டர் சிவலிங்கத்தின் சிலை மட்டக்களப்பில் திறந்து வைப்பு!

உலகப்புகழ்பெற்ற சிறுவர் கதைகூறும் கலைஞர் இலங்கையின் கதைமாமணி எனப்போற்றப்படும் மாஸ்டர் சிவலிங்கத்திற்கு இன்று மட்டக்களப்பில் சிலை அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

தமிழரின் அடையாளமாக, தமிழ் இலக்கியத்தின் முதுசமாக மிளிர்தவர் சிவலிங்கம் மாமா.அவர் மட்டக்களப்பு மாநகரத்திற்குட்பட்ட மஞ்சந்தொடுவாயை பிறப்பிடமாகவும் கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்டவர்.

உலகங்கெங்கும் உள்ள தமிழ் சிறார்களை தனது கதைமூலம் ஈர்த்தவர். வில்லிசை வேந்தர், சொல்லிசைச் செல்வர், கதைமாமணி மாஸ்டர் என பல்வேறு கௌரவ பட்டங்களைப்பெற்றவர்.எங்கும் யாரிடமும் இல்லாத சிறுவர்களுக்கு வித்தியாசமான முறையில் கதைகூறும் ஆற்றல்கொண்டு கதைகளை கூறிவந்தவர்.

மட்டக்களப்பு மக்களினால் அதிகளவில் நேசிக்கப்பட்ட ஒருவர் என்ற அடிப்படையில் இந்த சிலை மஞ்சந்தொடுவாயில் நிறுவப்பட்டுள்ளது.

சிவானந்தா தேசிய பாடசாலையில் 2001உயர்தரம் மற்றும் 1998 சாதாரண தரம் படித்த மாணவர்களின் பங்களிப்புடன் இந்த சிலை அமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டது.

மஞ்சந்தொடுவாய் வடக்கு அபிவிருத்திச் சங்கத்தின் அமுலாக்கத்தில் அச்சங்கத்தின் தலைவரும் சிவானந்தா பழைய மாணவர் மன்ற சிரேஸ்ட பழைய மாணவருமான உருத்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிலையினை திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் திருமதி கெனடி பாரதி உட்பட மாஸ்டர் சிவலிங்கத்தின் மனைவி மற்றும் மகன் டாக்டர் விவேக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்ப கல்லூரிக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள மாஸ்டர் சிவலிங்கத்தின் திருவுருவச்சிலை திறந்துவைக்கப்பட்டதுடன் மாஸ்டர் சிவலிங்கம் தொடர்பான நினைவுரைகளும் நடைபெற்றன.

புதியது பழையவை