பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவரின் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
இணையத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களைப் பதிவு ஏற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2021 மே மாதம் 3ஆம் திகதி தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஏறாவூர் பொலிஸார் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிறுத்தியதையடுத்து அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சிறைச்சாலையிலிருந்து அழைத்துவரப்பட்ட மோகன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை தொடர்ந்து எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
