மட்டக்களப்பு,படுவான்கரை பகுதியை உலுக்கிய மகிழடித்தீவு படுகொலையினை நினைவு தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.
1987 ஆம் ஆண்டு ஜனவரி 28ம் திகதி இறால் வளர்ப்பு பண்ணையில் இடம்பெற்ற படுகொலையும், 1992 ஆம் ஆண்டு ஜூன் 12ம் திகதி இடம்பெற்ற மகிழடித்தீவு படுகொலையும் சேர்த்து ஏறக்குறைய 180பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களை நினைவுகூரும் வகையில் வருடாந்தம் இந்த நினைவு தினம் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில்நேற்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் உறவினர்களின் பங்களிப்புடன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் நினைவுரை நடைபெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட்ட தமிழ் தேசிய ஆதரவாளர்கள்,படுகொலைசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
தங்களுக்கான நலன்களை மட்டும் தேடிய தலைமைத்துவங்கள் 74வருடங்களுக்கு பின்னர் அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த உண்மையினை சாதாரண சிங்கள மக்கள் விளங்கிக்கொண்டு தமிழ் தேசத்தினை அங்கீகரிக்கவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.




