வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பரிவிற்குட்பட்ட யானைகட்டியவெளி பிரதேசத்தில் இன்று (19) காலை குடும்பஸ்தர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலில் பலியானதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மண்டூர் மூன்றாம் பிரிவிவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இளையதம்பி யோகநாதன் என்பவரே இச் சம்பவத்தில் பலியானவராவார்.

சம்பவ தினமான இன்று தனது வீட்டிலிருந்து வேளாண்மை வயலினை பார்வையிடுவதற்காக சென்ற போது வீதியோர காட்டுப்பகுதியில் மறைந்திருந்த யானை குறித்த நபரினை தாக்கியதில் சம்ப இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி நீதிமன்ற பதில் நீதிவானின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சம்பவம் பற்றிய குறித்த விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, முறையான பாதுகாப்பு அரண்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் இன்மையால் அண்மைய நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானையின் தாக்குதலில் பல மனித உயிர்கள் காவு கொள்ளப்படுவதாக கிராம மக்கள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை