சிறிலங்காவை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து - ஐ.நாவில் பலமான கோரிக்கை

சிறிலங்கா அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் கொடுக்காமல், விரைந்து செயற்படுமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் வி.பி.லிங்கஜோதி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமை சபையின் 51ஆவது கூட்டத்தொடர் நேற்று (12) ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிலங்காவின் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமை சபை இதுவரை தீர்க்கமான அணுகுமுறையில் செயற்படவில்லை என்று நாங்கள் நம்புகின்றோம்.


தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர் குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்கும் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்.

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா 30/1, 46/1 தீர்மானங்களை கொண்டு வந்த போதிலும் இது தொடர்பில் கவனம் கொள்ளப்படவில்லை.

போரின் போது படுகொலை செய்யப்பட்டமைக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலும் நீதி தேடும் தமிழர்கள் இன்றுவரை விரக்தியடையவில்லை.

கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஓர் அங்கமாக தமிழர் நிலங்கள் தொடர்ந்து சிறிலங்கா ஆயுதபடைகள் அபகரித்து வருவதோடு, சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டும் வருகின்றது.

தமிழர்களுக்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை தடுக்க வேண்டும்.

சிறிலங்காவை பொறுப்புக்கூற வைக்க, ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு வேண்டுவதோடு தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகிவிடும்” என்றார்.
புதியது பழையவை