மின்னல் தாக்கிய நிலையில் காணாமல் போன மீனவரின் சடலம்

மட்டக்களப்பு மாவட்டம் கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் மின்னல் தாக்கிய நிலையில் காணாமல்போன மீனவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் மின்னல் தாக்கி மூன்று மீனவர்கள் காயமடைந்த அதேநேரம் ஓரு மீனவர் காணாமல் போயிருந்தார்.

இரு தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடியுடன் கூடிய கடும் மழைபெய்துவருகின்றது.

இந்த நிலையில் முகத்துவாரம் ஆற்றுவாய் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களை மின்னல் தாக்கியுள்ளது.இதன்போது மூன்று மீனவர்கள் படுகாயமடைந்த அதேநேரம் ஒரு மீனவர் காணாமல்போயிருந்தார்.

காணாமல்போன மீனவர் திராய்மடு மூன்று பிள்ளைகளின் தந்தையான 54வயதுடைய உம்முனி விஜயகுமார் என மீனவர்கள் தெரிவித்தனர்.

காணாமல்போன மீனவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில் நேற்று மாலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மரண விசாரணையை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

இதேநேரம் இந்த மின்னல் தாக்கம் மற்றும் கடுமையான மழை காரணமாக முகத்துவாரத்தின் ஆற்றுவாய் இயற்கையாகவே திறந்து கடலுக்குள் வெள்ளநீர் செல்லும் நிலையேற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.


புதியது பழையவை