இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழக கலை கலாசார பீட மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எப்.எம்.அஷ்ரஃப் பல்கலைக்கழக பேரவைத் தீர்மானத்தின்படி பேராசிரியராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.
அப்துல் பரீட் - சித்தி பளீலா ஆகியோரின் புதல்வரான இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளரான ஏ.எப்.எம்.அஷ்ரஃப் அவர்கள் திருகோணமலை மாவட்ட சீனக்குடாவை பிறப்பிடமாகக் கொண்ட இவர், தற்போது திருகோணமலையில் வசித்து வருகிறார்.
தனது ஆரம்பக் கல்வியை வெள்ளைமணல் அல் - அஸ்ஹர் மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை கிண்ணியா மத்திய கல்லூரியிலும் கற்ற இவர், 1998 ஆம் ஆண்டு தமிழ்த்துறையில் முதல் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும், 2007 ஆம் ஆண்டு முதுதத்துவமாணிப் பட்டத்தையும் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பெற்றுக்கொண்டார்.
2011 ஆம் ஆண்டு இந்தியா - தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் மொழிபெயர்ப்புத்துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட இவர், மொழிபெயர்ப்பு, மொழியியல், நவீன இலக்கியம், திறனாய்வு போன்ற துறைகளில் மிகுந்த ஈடுபாடுகளைக் காட்டி வருகின்றார். தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளை தனது துறைசார்ந்து முன்வைத்தும் வருகின்றார்.
1999 ஆம் ஆண்டு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறை உதவி விரிவுரையாளராக முதல் நியமனம் பெற்ற இவர், பின்னர் நிரந்தர விரிவுரையாளரானார்.
பல்கலைக்கழகத்தில் வெளிவாரிக் கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளராகவும், சிரேஷ்ட மாணவ ஆலோசகராகவும், விடுதிக் காப்பாளராகவும், கலைப்பீட பட்டப்படிப்பின் கற்கைகள் நிறுவகத்தின் ஸ்தாபக இணைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
கவித்துறையில் அதிக நாட்டம்கொண்ட இவர், ஈழத்து நவீன கவிதை முன்னோடிகள், மஹாகவியும் நீலாவணனும், தமிழ்மொழி ஓர் அறிமுகக் கையேடு, மொழிபெயர்ப்பியல், இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இலக்கிய ஆளுமைகள், அறுவடைக் காலமும் கனவும் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.
குறிப்பாக, பித்தன் கே.எம்.ஷாவின் சிறுகதைகள் இவரால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதும் குறிப்பிட்டத்தக்கது.