கிழக்கு மாகாணத்தில் மேற்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் மன அழுத்தம் காரணமாக கற்றல் செயற்பாடுகளிலிருந்து விலகி போதைவஸ்து பாவனை மற்றும் தற்கொலை முயற்சிகளுக்கு செல்லும் நிலைகள் காணப்படுவதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெற்ற மாகாண மட்ட அழகியல் தின போட்டியின் பிரதான ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் பிரதான மண்டபத்தில் (20) திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.
கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் அழகியல் பாடங்களுக்கான உதவிக்கல்விப்பணிப்பாளர்
எஸ்.ஸ்ரீதரனின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளார்.
இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் திருமதி.குலேந்திரகுமார் சுஜாதா, மாகாண பிரதிக்கல்விப் பணிணிப்பாளர் (திட்டமிடல்) ஆர்.நிர்மலரஞ்சன், மாகாண கல்வித்திணைக்கள உயர் அதிகாரிகள், வலயக் கல்விப் பிரதிப்பணிப்பாளர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், மகாஜன கல்லூரியின் அதிபர் அருமைராஜா, ஆசிரிய ஆலோசகர்கள், நடுவர்கள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், பிரதியதிபர்கள், ஆசிரியர்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு மெதஸ்த மத்திய கல்லூரியின் தமிழ் பண்பாட்டு கலாசார வாத்தியங்கள் இசைத்து அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து பிரதான நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.
மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்து, இறைவணக்கம் என்பன இடம்பெற்று, மாணவர்களின் வரவேற்பு நடனம், சிறப்பு அதிதிகள் உரை, மேலும் பல மாணவர்களது கண்கவர் ஆற்றுகைகள் என்பவற்றை தொடர்ந்து பிரதம அதிதி உரை இடம்பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து அழகியல் தினப் போட்டிகளில் நடுவனம் வகிக்கவுள்ள நடுவர்களுக்கான அறிவுறுத்தலின் பின்னர் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாரை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இதன்போது ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்றிருந்தனர்.
இக் கிழக்கு மாகாண மட்ட அழகியல் தின போட்டியில், கோட்ட மட்டங்களில் வெற்றிபெற்று, மாவட்ட மட்டத்தில் வெற்றிபெற்ற பாடசாலை மாணவர்கள் இதில் கலந்துகொண்டதுடன், இதில் குழு நடனம், தனி நடனம் மற்றும் குழுப்பாடல், தனிப்பாடல் ஆகிய போட்டிகள் இடம்பெற்று வருகின்றது.
அதேவேளை இப்போட்டி நிகழ்வுகள் மகாஜனா கல்லூரியில் இடம்பெறவுள்ளதுடன், சிங்கள மொழி மூல மாணவர்களுக்கான போட்டிகள் எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் தெய்யத்தகண்டியிலும், முஸ்லிம் மாணவர்களுக்கான சங்கீத போட்டிகள் எதிர்வரும் 29 திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதே வேளை இம் மாகாண மட்ட போட்டிகளில் வெற்றியீட்டும் பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் கொழும்பில் நடைபெறவுள்ள தேசிய மட்ட போட்டிகளில் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர்,
இந்த வருடம் முதன்முதலாக மத்திய கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக அழகியல் போட்டி நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளன.
மாணவர்கள் மத்தியில் உள்ள ஆக்கசிந்தனை,கவித்திறன்களை வெளிக்கொணரவேண்டியதேவையுள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.இவ்வாறானபோட்டி நிகழ்ச்சிகள் மாணவர்களின் மனவெழுச்சிகளை குறைத்து அவர்களுக்கு சுதந்திரமாக,மகிழ்ச்சியாக செயல்படக்கூடிய சந்தர்ப்பத்தினை பெற்றுக்கொடுப்பது என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
இன்று பெரும்பாலான மாணவர்கள் மன அழுத்தங்களுக்குள்ளாகியுள்ளனர்இந்த மன அழுத்தம் பல்வேறு நடத்தை மாற்றங்கள் ஏற்படுவதற்கு தூண்டுகோளாகயிருக்கின்றது.அந்த வகையில் அவர்களை இந்த அழகியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடுத்துகின்றபோதுதான் கற்றல்செயற்பாடுகளில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடமுடியும்.
மேற்பிரிவான தரம் 10,11க்கும் மேற்பட்ட மாணவர்களைபார்க்கும்போது பெரும்பாலான மாணவர்கள் இந்த மன அழுத்தம் காரணமாக இந்த கற்றல் செயற்பாடுகளிலிருந்து விலகி போதைவஸ்து பாவனை,சிலர் தற்கொலைமுயற்சிகளில் ஈடுபவதையும் எங்களால் காணக்கூடியதாகவுள்ளது.
இவ்வாறான அழகில் கற்கைகள் ஊடாக அவர்களிடம் சில திறமைகளை வளர்க்கின்றபோது இவ்வாறான ஆபத்தான செயற்பாடுகளிலிருந்து மீட்ககூடியதாகயிருக்கும் என்பது இதன் நோக்கங்களில் ஒன்றாகவுள்ளது.
ஒரு சங்கீத உபகரணத்தையாகது மாணவர் ஒருவர் வாசிக்க கற்றுக்கொள்ளும்போது அவர்களிடம் சாதகமான நடத்தைகள் ஏற்படுவதை அவதானித்திருக்கின்றோம்.





