கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வருகின்ற மனித ஆட்கடத்தலை இல்லாதொழிப்பதற்கு விசேட செயற்பாட்டு பொறிமுறையொன்று எமது மாகாணத்தில் தயாரிக்கப்பட வேண்டுமென்று மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.
ஆம்கோர் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த “மனித ஆட்கடத்தலுக்கு எதிராக அரசாங்கத்தையும் சமூகம் சார்ந்த அமைப்புகளையும் வலுவூட்டுவதன் மூலம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துதல்” எனும் தொனிப்பொருளில் பிரதம செயலக கூட்ட மண்டபத்தில் (25) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண பிரதம செயலாளர் தலைமையில் இப்பொறிமுறையை ஏற்படுத்த கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் அறிவித்து அதற்கு அவர்களின் ஆதரவை வழங்குமாறும் ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.
திருகோணமலை மாவட்டத்தில் ஆட்கடத்தலைத் தடுக்க அரச அதிகாரிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் பற்றி மனித ஆட்கடத்தலைத் தடுக்க செயற்படும் அமோர் நிறுவனம் எடுத்துள்ள தற்போதைய நடவடிக்கைகள் குறித்து ஆம்கோர் நிறுவனத்தின் பணிப்பாளர் பி.முரளிதரன் ஆளுநருக்கு எடுத்துரைத்தார்.
இக்கலந்துரையாடலில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, ஆளுநர் செயலக செயலாளர் எல்.பி.மதநாயக்க, மாகாண அமைச்சின் செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் பணிப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்கள், சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பின் கிழக்கு மாகாண திட்ட இணைப்பாளர் திருமதி மேரி மௌரீன் லம்பேர்ட், பொலிஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.