வடகிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் எதிர்வரும் 27ஆம் திகதி மாலை 6.05மணிக்கு அரசியல் கட்சி வேறுபாடுகள் மறந்து அனைவரும் ஒன்றிணைந்து விளக்கேற்றமுன்வரவேண்டும் என்பதுடன் அன்றைய தினம் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு தமிழ் மக்கள் சென்று அஞ்சலி செலுத்துவது கடமையெனவும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தை சிரமதானம் மூலம் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று (13-11-2022)காலை ஆரம்பமானது.
மட்டக்களப்பிலுள்ள மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் நாளை முன்னிட்டு இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
தமிழரசுக்கட்சியின் பட்டிப்பளை கிளையின் ஏற்பாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் இந்த சிரமதானம் நடாத்தப்பட்டது.
இந்த சிரமதானத்தில் பட்டிப்பளை பிரதேசசபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம் உட்பட கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.