மட்டக்களப்பு - தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் பதாதை அகற்றப்பட்டுள்ளது

மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்ட மாவீரர் துயிலும் இல்ல நினைவேந்தல் பதாதை இன்று(16-11-2022 )காலை இனம் தெரியாத நபர்களினால் அகற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் பதாதைகள் கிரான் பிரதான வீதியின் சுற்றுவளைவு மையப் பகுதியில் இன்று காலை இரண்டு பக்கங்களிலும் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவுகள்,பொதுமக்கள், மற்றும் ஏற்பாட்டுக் குழவினர் சென்று பற்றைகள் படர்ந்து காணப்பட்ட குறித்த இடத்தினை சிரமதானப் பணியினை மேற்கொண்டதுடன் நினைவுப் பதாதையும் காட்சிப்படுத்தப்பட்டு நினைவுச் சுடரும் ஏற்றியிருந்தனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பின்னர் 3 வருடங்கள் கடந்த நிலையில் மாவட்டத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடுகள் தரவை,மற்றும் வாகரை போன்ற இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

எதிர்வரும் 27-11-2022 ஆம் திகதி கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாலை 6.05 மணிக்கு மாவீரர் நினைவேந்தல் சுடர் இறந்த மாவீரர்களின் உறவுகளினால் ஏற்றப்படவுள்ளது.இதற்கான பல்வேறு ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இதற்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் பொதுமக்களுக்கான தாகசாந்தி நிகழ்வுகள் ஏற்பாட்டு குழவினரால் ஒழுங்கமைக்கபட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 18-11-2022ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் விஷ்வமடு தேராவில் உடையார்கட்டு சந்தியில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர் தவத் திரு வேலன் சுவாமிகள் வட கிழக்கு முன்னேற்ற கழகத்தின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட சமூக பற்றாளருமான குருசுமுத்து வி.லவக்குமார்
விஷ்வமடு தேராவில் மட்டு அம்பாறை துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுத் தலைவர் த.யோகேஸ்வரன் ஏ.ஜோன்சன் ஆகியோர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேபோன்று மட்டக்களப்பு சந்திவெளியில் எதிர்வரும் 19-11-2022 ஆம் திகதி மாவீரர்களின் பெற்றோர்கள் கெரவிக்கப்படவுள்ளனர்.நிகழ்வில் அருட்தந்தை க.ஜெகதாஸ் மற்றும் நிதர்ஷன் ஆகியோர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



புதியது பழையவை