ஹோமாகம, திபாங்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து இரண்டு மகள்கள் மற்றும் மகன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திபாங்கொட சமகி மாவத்தையில் வசிக்கும் 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பத்து வருடங்களுக்கு முன்னர் தனது மனைவி பிள்ளைகளை விட்டுச்சென்றமையினால் 13 வயது மகன், 16 வயது இளைய மகள் மற்றும் 24 வயது மூத்த மகள் ஆகியோருடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதன்போது, மூத்த மகள் 11 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், 13 வயதுடைய மகனும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1929 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு
சந்தேகநபரான தந்தையினால் 16 வயது மகளை துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு (1929) செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், மத்தேகொட பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அதிகாரிகள் குழுவொன்று வீட்டுக்குச் சென்று குழந்தைகளை விசாரித்த நிலையில் உண்மை தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், குழந்தைகளின் தந்தை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, சந்தேகநபர் இரண்டு வருடங்களாக வெளிநாட்டில் தங்கியிருந்ததாகவும், மூத்த மகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரு சிறுமிகள் மற்றும் சிறுவன் களுபோவில போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்னர்.
இதன்போது, வெளியான அறிக்கையில் மூன்று பிள்ளைகளும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதுடன்,கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.