வியட்நாமிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட 151 இலங்கையர்களும், தற்போது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று இரவு தமது வீடுகளை சென்றடைவார்கள்.
303 இலங்கையர்கள் கடல் மார்க்கமாக கனடாவிற்கு செல்ல முயன்ற போது படகு பழுதடைந்து வியட்நாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 151 பேர் இன்று சுயவிருப்பத்தின் பெயரில் இன்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 85 பேர், திருகோணமலையை சேர்ந்த 12 பேர், மன்னாரை சேர்ந்த 10 பேரும், கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பை சேர்ந்த ஏனையவர்களும் இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 10 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களிடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிசார், புலனாய்வு அமைப்புக்கள் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
பின்னர் 3 வாகனங்களில் சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மன்னாரை சேர்ந்த 10 பேரும் ஒரு வாகனத்திலும், கிழக்கு மற்றும் வடக்கை சேர்ந்தவர்கள் இரண்டு பேருந்துகளிலும் அனுப்பி வைக்கப்பட்டனர். பயண ஏற்பாடுகளை ஐஓஎம் நிறுவனம் மேற்கொண்டது.
வீட்டுக்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் 200 அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் நாட்டை விட்டு புறப்படுவதற்கு முன்னர் மேற்கொண்ட தொழில் முயற்சிகளை மீள ஆரம்பிப்பதற்கு ஐஓம் நிறுவனம் ஒரு தொகை நிதியுதவியை வழங்க முயற்சிக்கும் என அவர்களிற்கு உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது.