மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியில் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றாச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (04.11.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 8 கிராம் ஹெரோயின் மற்றும் 1.4 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் விற்பனை
கைது செய்யப்பட்ட பெண்ணையும், கைப்பற்றப்பட்ட சான்றுப்பொருட்களையும் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் மட்டக்களப்பில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் மற்றும் பாவனையாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.