2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடவுள்ள 82,000 வேட்பாளர்கள்!இலங்கையில் எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் 340 உள்ளூராட்சி சபைகளில் 8,771 ஆசனங்களுக்கு 30க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த சுமார் 82,000 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இந்த 82,000 வேட்பாளர்கள், அவர்களது கட்சிப் பெயர்கள் மற்றும் சின்னங்கள் தொடர்பான தகவல்களை மூன்று மொழிகளிலும் இன்று பிற்பகல் 2 மணிக்குள் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உதவித் தேர்தல்கள் ஆணையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

இதற்கான அறிவிப்பில் கையொப்பமிட்ட தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, இது தொடர்பான விவரங்கள் நாளை (29-01-2023) வர்த்தமானியில் அச்சிடுவதற்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் வாக்குச் சீட்டுக்கள் வழங்கப்படும். இதற்கிடையில், தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு, (Ranil Wickremesinghe) ஆணைக்குழு தலைவர் புஞ்சிஹேவ நேற்று மாலை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.


சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு கொலை மிரட்டல்கள் தடையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆணைக்குழு உறுப்பினர் பி.எஸ்.எம். சார்லஸ் (P.S.M.Charles) தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.


ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆணைக்குழுவின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சிரமம் இருப்பின் விதிகளின் கீழ் அதிகாரங்களை ஆணையாளர் நாயகத்திற்கு வழங்க முடியும் என தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை