ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் (26) கொழும்பில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் அரசியல் கட்சித் தலைவர்களின் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க காரசாரமான கருத்துக்களை தெரிவித்ததாக தெரியவருகிறது.
ஜனாதிபருக்குரிய நிறைவேற்று அதிகாரம் தன்னிடம் இருப்பதால், நாட்டின் அரசியலமைப்பில் உள்ள 13 ஆம் திருத்தம் உட்பட்ட விடயங்களை தான் நடைமுறைப்படுத்தப்போவதாகவும், அவர் தெரிவித்திருந்தார்.
தனது இந்த நகர்வை எதிர்க்கும் தரப்புகள் முடியுமானால் 22ஆம் திருத்தத்தை கொண்டுவந்து 13ஆம் திருத்தத்தை அரசியல் அமைப்பில் இல்லாமல் செய்யலாம் எனவும் அவர் சீற்றத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள மாகாண சபைகளுக்கு, லண்டன் நகர சபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
13 ஆம் திருத்ததை அரசியலமைப்பில் வைத்துக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தாமல் இருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளான ரொலோ, புளொட் ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்திருந்த போதிலும் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ் மக்கள் விடுதலை கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
காணி விடுவிப்பு, காணி அபகரிப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விடயங்களில் வாக்குறுதி அளிக்கப்பட்ட விடயங்கள் எதுவும் நிறைவேற்றப்படாத காரணத்தினால் இந்தக் கூட்டத்தில் தாம் பங்கேற்கவில்லை என ரொலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்துள்ளார்.
வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என அதிபரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் இந்த விடயங்கள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அடுத்தடுத்த கூட்டங்களில் பங்கேற்போம் என செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தாம் முன்வைத்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாத காரணத்தினால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.