தமிழ் தேசிய பரப்பில் தமிழ் தேசியம் பேசி அரசியல் செய்துவரும் தமிழ் கட்சிகள் ஒன்று படவேண்டும் சமஸ்டியை பெற்றுத் தர வேண்டும் என்றெல்லாம் கடந்த இரண்டு தசாப்த காலமாக தமிழ் மக்கள் விடுத்த குரலுக்கு தமிழ் கட்சிகள் சற்றும் செவிசாய்க்காமை குறித்து தமிழ் புத்திஜீவிகள் மத்தியில் கவலை தெரிவிக்கப்படுகிறது.
பாரிய யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து தேசிய இலக்கை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காக அன்று உருவாக்கப்பட்ட அமைப்புதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
ஒரு சிறிய தேர்தலுக்காக அந்த பெரிய கூட்டமைப்பின் ஒற்றுமை என்கின்ற ஆணிவேரை இன்று அறுத்துள்ள நிலைப்பாட்டை காண முடிகிறது .
இது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு செய்த வரலாற்றுத் துரோகமாக கருதலாம்.
தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு மாகாணத்தில் ஒற்றுமை அவசியம்.ஓரணியில் வாருங்கள் என்ற கோசம் முன்வைக்கப்பட்டுவந்தது.
அண்மையில் கூட வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் எட்டு மாவட்டங்களிலும் எக்காலத்தில் இந்த தமிழ் கட்சிகள் ஓர் அணியில் திரளவேண்டும் மீளப் பெற முடியாத சமஸ்டியை பெற்றுத்தர வேண்டும் தேசிய இலக்கை வென்றெடுக்க வேண்டும் என்றெல்லாம் போராட்டம் நடத்தியும் உண்ணாவிரதம் நடத்தியும் வந்திருந்தார்கள். குறிப்பாக தாய்க்குலம் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் தமிழ் மக்களது இந்த கோரிக்கையை எல்லாம் "செவிடன் காதில் ஊதிய சங்காக" தமிழ் கட்சிகள் மத்தியில் இருக்கின்றதை பார்க்கும் பொழுது கட்சிகள் மக்களுக்காக அல்ல அவர்களது நன்மைக்காகவே அல்லது அவர்களது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் அல்லது ஈகோவுக்காகவே என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகின்றது.
இன்னும் காலம் கடந்து விடவில்லை. எனவே தாங்கள் எடுத்த தீர்மானங்களை மாற்றி அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் கூட்டமைப்பு என்கின்ற ஒரு அணியிலே பயணிக்க வேண்டும் என்பது தமிழ் புத்திஜீவிகளின் வேண்டுகோளாக இருக்கின்றது .
இதனை நடைமுறைப்படுத்தாத பட்சத்தில் இந்த கட்சிகளை தமிழ் மக்கள் முற்றாக ஒதுக்க வேண்டிவரும். தேர்தலில் மக்களின் பலம் என்ன என்பதை இந்த கட்சிகள் தெரியவேண்டிவரும்.
ஒன்றாக வருவதை விட ஐந்தாக வந்தால் பலம் கூடும் என்று கூறும் தத்துவம் இங்கு பொருந்தாது.ஐந்தாக வரும் நிலையில் மக்கள் வெறுப்படைந்து நம்பிக்கை இழந்து வாக்களிக்காத அல்லது தேர்தலை புறக்கணிக்கின்ற துரதிஷ்ட நிலையும் ஏற்படலாம்.அதுவும் இன்றைய பொருளாதார நெருக்கடியில் இது அவசியமா?
தேர்தலின் பின்னர் ஆட்சி அமைக்கும் பொழுது கூட்டுச் சேரலாம் என்றெல்லாம் கூறுவது ஒரு போதும் நடைமுறைச் சாத்தியமானதல்ல.
அது மாத்திரமல்ல தேர்தல் பரப்புரை காலத்திலே ஒருவரையொருவர் நிச்சயமாக வசை பாடுகின்ற செயற்பாடும் இடம்பெறும் . அது இப்போதே ஆரம்பமாகிவிட்டது.எனவே அதன் பின்னர் கூட்டுச் சேர்தல் என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
இந்த சிறிய ஊராட்சி தேர்தலுக்காக இந்த மாபெரும் கூட்டை உடைத்தது வரலாற்று துரோகமாகும்.
இன்னும் காலம் கரந்துவிடவில்லை.எனவே இந்த காலத்திலாவது மக்களின் வெறுப்பையும் ஆத்திரத்தையும் இன்னும் இன்னும் அதிகரிக்காமல் உடனடியாக அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் வந்து நமது தேசிய இலக்கிய வெல்வதற்கும் தமிழ் மக்கள் நிம்மதியாக சுதந்திரமாக வாழ்வதற்கும் உதவி செய்யுமாறு தமிழ்ப் புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
