வீதியில் கண்டெடுத்த பணத்தை சமூகப்பொறுப்போடு ஒப்படைத்த - கொக்கட்டிச்சோலை இளைஞன்!





அம்பாறை கல்முனையில் வீதியில் கண்டெடுக்கப்பட்ட 5 இலட்சம் ரூபா பணப்பையை, கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்த மனிதபிமானமிக்க இளைஞனை பொலிஸார் பாராட்டியுள்ளனர்.

காணாமல் போன 5 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டு பொலிஸார் முன்னிலையில் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கல்முனை எல்லைக்குட்பட்ட அரச வங்கியில் வியாபார நடவடிக்கைக்காக பணத்தை வைப்பிலிடச் சென்ற வர்த்தகர் ஒருவர், தனது பணத்தை தவற விட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில், வங்கி மேலாளருக்கு தகவல் வழங்கிய வர்த்தகர், சி.சி.ரிவி பதிவுகள் ஊடாக பணம் தவறவிடப்பட்டமை தொடர்பில் அவதானித்துள்ளார்.

நபர் ஒருவர் தவற விடப்பட்ட பணத்தொகையை எடுத்துச் சென்றமை தெரியவந்த நிலையில், அது தொடர்பில் முறைப்பாடளிக்க கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்குவர்த்தகர் சென்றுள்ளார்.

அங்கு வருகை தந்த கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த இளைஞரொருவர், வீதியில் கண்டெடுத்த பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்ததோடு, பணத்தின் உரிமையாளரை இனங்காணுமாறு பொலிஸாரிடம் கோரியுள்ளார்.

இவ்விரு சம்பங்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், முறைப்பாடளிக்க வருகை தந்த வர்த்தகரிடம் உரிய அடையாளங்களைப் பெற்று, இளைஞனால் கண்டெடுக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட பணத்தை, இளைஞன் முன்னிலையிலேயே வர்த்தகரிடம் ஒப்படைத்தனர்.

வீதியில் கண்டெடுத்த பணத்தை சமூகப்பொறுப்போடு ஒப்படைத்த இளைஞனைப் பொலிஸார் பாராட்டிய அதேவேளை, பணத்தைத் தொலைத்த வர்த்தகரும் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
இளைஞனின் முன்மாதிரியான செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை