தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் இறுதிக் கட்ட போரில் உயிரிழந்ததை இலங்கை அரசாங்கம் அப்போது உறுதிப்படுத்தியது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும், அவருடன் அவரது குடும்பத்தாரும் நலமுடன் இருப்பதாகவும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்றையதினம் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அறிவித்திருந்தார்.
அதன் பின்னர், இலங்கையிலும் உலகத்திலும் உள்ள தமிழர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் சிறு அதிர்வலைகளை தோற்றுவித்துள்ள அதேநேரம், சர்ச்சைக்குரிய கருத்துக்களும் விமர்சனங்களும் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பழ.நெடுமாறனின் அறிவிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிபிசி தமிழிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட போது,
“பழ.நெடுமாறன் ஐயா, தமிழீழ போராட்டத்துடன் பின்னிப் பிணைந்தவர். அவர் அப்படி சொல்வதாக இருந்தால் அதில் காரணங்கள் இருந்தால், அதை அவரே உறுதிப்படுத்த வேண்டும்.
போராட்டம் நடந்த இடம் வடக்கு கிழக்கு என்ற அடிப்படையில், இறுதிக் கட்டத்தில் நியாயமான போராட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை இலங்கை அரசாங்கமும், பல அமைப்புக்களும் உறுதிப்படுத்தியுள்ளன” என குறிப்பிட்டார்.