இலங்கையில் நிச்சயமற்ற நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்!!உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிச்சயமற்ற தன்மையிலேயே காணப்படுகிறது. சில அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள போதிலும், வேட்பாளர்கள் மந்தமாகவே காணப்படுகின்றனர்.

தேர்தல் குறித்த நிச்சயமற்ற தன்மைதான் இதற்கான காரணமாகும் என்று இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் என்ற முறையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பகிரங்கமாக அறிவித்துள்ளீர்கள்.

எவ்வாறாயினும் வாக்குச் சீட்டு அச்சிடும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என அரச அச்சகம் அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.

போதிய பணம் கிடைக்கவில்லை எனக் கூறி உரிய பணத்தை விடுவிக்குமாறு திறைசேரியையும் கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

தற்போதைய நிலைவரத்தை ஆராய்ந்து, திட்டமிட்ட திகதியில் தேர்தலை நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழு வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவது மிகவும் அவசியமாகும். பணம் இருக்கும் போது பணம் இல்லை என்று நிதி அமைச்சின் செயலாளரோ அல்லது வேறு எந்த செயலாளரோ அறிவிக்க முடியாது.

ஆனால், நிதி அமைச்சின் செயலாளர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் திறைசேரியில் பணம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவ்வாறெனில் தேர்தலுக்காக கோரப்படும் பணம் கிடைக்கப் பெறுமா என்ற கேள்வி எழுகிறது.

இவ்வாறான சூழலில்அரச அதிகாரிகளும் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இதனை நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலுக்கு பொருத்தமான சூழலாக நாம் கருதவில்லை.

எனவே தேர்தல் ஆணைக்குழு, திறைசேரி மற்றும் அரசாங்கம் ஆகிய மூன்று தரப்புக்களும் ஒரே இடத்தில் கூடி இது தொடர்பில் ஆராய்ந்து நிதி தொடர்பில் உடன்பாட்டை எட்டுவது பொறுத்தமானதாகும். அது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
புதியது பழையவை