மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கு எதிர்ப்பு - வெளிநடப்புச் செய்தது த.தே.கூட்டமைப்புமட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவனால் இன்று, சபை அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் குழு அறிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநடப்புச் செய்தது.
மட்டக்களப்பு மாநகர சபை அமர்வு இன்று காலை மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் வழமையான சம்பிரதாயங்களுடன் ஆரம்பமானது.


மாநகர சபை முதல்வர் தலைமையுரையினைத் தொடர்ந்து நிதி குழுவின் அறிக்கையை சமர்ப்பித்து , அதற்கு சபையின் அனுமதியை கோரினார்.

நிதிக்குழுவின் அறிக்கையினை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் அது வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டும் எனவும் நிதிக்குழுவின் பங்குபற்றல் இல்லாமல் முதல்வரினால் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக
சபை உறுப்பினர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையானது மாநகரசபையின் கட்டளை சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆதரவு வழங்குமாறும் முதல்வர் கோரியிருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்களும் ஏனைய சுயேட்சை குழு உறுப்பினகளும் குறித்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன்
வாக்கெடுப்பும் கோரினர்.

இதன்போது சபையில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கடுமையான வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர் ஜெயச்சந்திரன், நிதிக்குழுவின் அறிக்கையினை கிழித்தெறிந்து சபையினை விட்டு
வெளியேறிச்சென்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், புளட் அமைப்பின் உறுப்பினர்கள், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்
கட்சி மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

38 உறுப்பினர்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் இறுதியாக சபையில் 14உறுப்பினர்களேயிருந்த நிலையில் நிதிக்குழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் ஏனைய விடயங்களும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை