பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது!



நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30க்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்ற நிலையில் நாடாளுமன்றத்தின் சபா பீடத்தில் எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

தேர்தல் இடம்பெற வேண்டுமென கூச்சலிட்டவாறு, பதாகைகளை ஏந்தியபடி இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ‘தேர்தலுக்கு பயந்த அரசாங்கமே தேர்தலை நடத்து’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் முன்னெடுத்ததையடுத்து நாடாளுமன்றில் அமளிதுமளி ஏற்பட்டிருந்தது.

சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், கோஷங்களை எழுப்பியிருந்தனர். எனினும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தொடர்ந்தும் உரையாற்றி வந்தநிலையிலும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திர மக்கள் கூட்டணி உள்ளிட்ட எதிரணிகள் இணைந்தே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தன. எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டதுடன், கோஷமிட்டவாறு அக்கிராசனத்தையும் அண்மித்தனர்.

இதனையடுத்து, சபாநாயகர் சபை நடவடிக்கையை நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைத்தார். தேயிலை சபை சட்டத்தின் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 4 கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழான உத்தரவுகள் குறித்து இன்று விவாதிக்கப்பட இருந்த நிலையிலேயே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை