விடுதலைக்காக சிந்திக்கும் ஒவ்வொரு தமிழனும் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் - சாணக்கியன் அறைகூவல்



எமக்கு விடுதலை தேவை என சிந்திக்கின்ற ஒவ்வொரு தமிழனும் சுதந்திரதினத்திற்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கு பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மேலும், எமக்கான அரசியல் உரிமைகளை நாம் போராடிப் பெற்றுக்கொள்வோமே தவிர யாரும் பிச்சை போடவேண்டிய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“75ஆவது சுதந்திர தினத்தினைப் பொறுத்தவரையில் தமிழர்களுக்கு இருள் சூழ்ந்த நாளாகும். போராட்டத்தின் வடிவம் மாறியிருக்கலாம். ஆனால் தமிழர்களுக்கான இன விடுதலையே எமக்கான ஒரே இலக்காக அமைந்துள்ளது.

75 ஆண்டுகளாக தமிழர்களாகிய எமக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கின்றது. தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு தற்போது பொருளாதாரச் சுதந்திரம், தமிழர்களாகிய எமக்கு ஜனநாயக மற்றும் அரசியல் ரீதியில் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுடன் சம அந்தஸ்தும் கூட மறுக்கப்பட்டிருக்கின்றன.



இந்த நிலையில், 13ஆவது திருத்தச் சட்டம் என்பது சிறிலங்காவின் அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயமாகும். எமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை இந்த 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமே பெற்றுக் கொள்ள முடியும். எனவே மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும்.

அதற்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன் மூலமே எமக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்பம் இருக்கும். எனவே மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் 13 ஆவது திருத்தச் சட்டம் ஊடான தீர்வு என்பது சாத்தியமற்றதாகும்.

நாம் எமது சொந்த நாட்டிலேயே இரண்டாம் கட்டப் பிரஜைகளாகவே இருக்கின்றோம். எனவே தமிழர்களாகிய நாம் எமது உரிமைகளுக்காகப் போராட வேண்டிய தேவை தற்போது காணப்படுகின்றது.


எமக்கான உரிமைகளைத் தீர்மானிப்பதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை. எனவே இந்த விடயத்தில் சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்ப்பதற்கு நாம் பல வேலைத்திட்டங்களை மிக விரைவில் முன்னெடுக்கவுள்ளோம்.


இந்த சுதந்திர தினமானது எமக்கு இருள் தினமாகும். எனவே நாம் எமது உரிமைகளைப் போராடியே பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த தினத்தில் நாம் எமது விடுதலைக்காகப் போராடுவோம் என சபதம் எடுக்க வேண்டும்.

தமிழர்களுக்கு இருள் தினம் பெப்ரவரி நான்காம் திகதி எனும் தலைப்பில் நாம் நாளை கல்லடிப் பாலத்திற்கு அருகில் முன்னெடுக்க இருக்கின்ற எதிர்ப்பு போராட்டத்தில் அனைத்து மக்களும் ஒன்று கூடவேண்டும் என்பதுடன், இந்த சுதந்திர தினம் எமக்கான இருள்தினம் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும்.
புதியது பழையவை