மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையே முறுகல் நிலையேற்பட்டுள்ளது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் பொதுமக்கள் அரச காணிகளில் அத்துமீறி குடியேற முற்பட்ட நிலையில் இந்த முறுகல் நிலையேற்பட்டுள்ளது.
சவுக்கடி-மைலம்பவெளி ஆகியவற்றின் எல்லைப் பகுதியாகவுள்ள குறித்த பகுதியில் உள்ள மக்கள் நீண்டகாலமாக காணிக்கான கோரிக்கையினை விடுத்துவருகின்றனர்.
இந்த நிலையில் சவுக்கடி பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் அரச காணிகள் பணம் படைத்தவர்களினால் வேலிகள் அடைக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றது.
அப்பகுதியில் உள்ள மக்கள் தமக்கு 10 பேர்ச் காணியாவது தருமாறு கோரிக்கை விடுத்துவந்த நிலையில் அப்பகுதியில் உள்ள அரசகாணிகள் வேறு இடங்களை சேர்ந்த தனவந்தர்களினால் அபகரிக்கப்படும் நிலையில் அவற்றினை தடுப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் பொலிஸாரோ பிரதேச செயலகமோ முன்னெடுக்கவில்லையென அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அத்துடன் காணியற்ற தாங்கள் ஒரு 10பேர்ச் காணியை பிடிக்கும்போது வந்து தடுக்கும் பொலிஸாரும் கிராம சேவையாளரும் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணியை பிடிக்கும்போது யாரும் அப்பகுதிக்கு வருவதில்லையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக அரசியல் பின்னணியில் குறித்த பகுதியில் காணிகள் அபகரிக்கப்படுவதாகவும் பொதுமக்களை குடியேறவிடாமல் தடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் தாங்கள் அதிகாரிகளினால் தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளை கொண்டு தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக கொக்குவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இதன்போது தெரிவித்துள்ளார்.