மட்டக்களப்பில் - தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வுதந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு தந்தை செல்வா சதுக்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தந்தை செல்வாவின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன் மற்றும் ஞா.சிறிநேசன், இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், முன்னாள் மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன், உள்ளூராட்சி சபை தவிசாளர்கள், இலங்கை தமிழரசு கட்சியின் மகளிர் அணி உறுப்பினர்கள், வாலிபர் முன்னனி தலைவர் தீபாகரன் மற்றும் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சாணக்கியன் உரை:-


இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உரையாற்றுகையில்,

"இலங்கை தமிழரசு கட்சியினுடைய ஸ்தாபகர் செல்வநாயகம் ஐயா அவர்கள் மாபெரும் தீர்க்கதரிசி என்று தான் கூற வேண்டும்.

இந்தக் கட்சியின் உருவாக்கத்தில் இருந்து இன்று வரைக்கும் இந்த கட்சியினுடைய பிரதிநிதிகள் நாடாளுமன்றமாக இருக்கட்டும், மாகாண சபையாக இருக்கட்டும், உள்ளூராட்சி மன்றங்களாக இருக்கட்டும் அனைத்திலும் வடக்கு கிழக்கில் இந்த கட்சி பிரதானமாக 70 வருடங்களுக்கு மேலாக மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கி, மக்களது ஆதரவை பெற்றுள்ளது.

வடக்கு கிழக்கிலே வாழும் தமிழ் மக்களினுடைய கட்சியாக இருப்பதற்கு காரணம் தந்தை செல்வா அவர்களே.

கட்சியினுடைய கொள்கைகள், கட்சியினுடைய கட்டமைப்பு, கட்சியை பற்றி வடக்கு கிழக்கில் மக்கள் மத்தியில் இருக்கும் அபிப்பிராயம் அந்தக் கட்சி உருவாக்கிய தந்தை செல்வா அவர்களை தீர்க்கதரிசி எனக் கூறுவதற்கு காரணமாகும்.

இலங்கையின் 75 வருட காலத்தைப் பார்த்தால் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஒரு அடையாளமே இல்லாத கட்சியாக அண்மை காலம் வரைக்கும், அதாவது ரணில் விக்ரமசிங்க அதிபராக தெரிவு செய்யும் வரைக்கும் இருந்தது.

முதலாவது உருவாக்கப்பட்ட கட்சியில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு ஆசனம் கூட பெற முடியாத நிலைக்கு அழிந்து போய்விட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அதே போலதான் நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பது கூட இன்று வரைக்கும் எமக்கு தெரியாமல் உள்ளது.

சிலர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என கூறுகின்றார்கள், மொட்டுக் கட்சி என்று கூறுகின்றார்கள்.

ஆனால் இலங்கை தமிழரசு கட்சி மாத்திரம் இத்தனை தசாப்தங்களுக்கு பின்பும் வடக்குக் கிழக்கிலே அனைத்து மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக நாடாளுமன்ற பிரதிநிதிகளை வைத்திருக்கும் கட்சி.

அதற்கு காரணம் தமிழரசுக்கட்சி உருவாக்கப்பட்ட பொழுது எழுதப்பட்ட யாப்பு.


தற்பொழுது இலங்கை தமிழரசுக்கட்சியை பலப்படுத்த வேண்டிய ஒரு காலப்பகுதி ஏனென்றால் இலங்கை தமிழரசு கட்சி மக்கள் முன்பாக எதிர்வரும் காலங்களிலே தேர்தலுக்கு செல்லும் பொழுது, எங்களுடைய கட்சியினுடைய கொள்கைகள் என்ன என்பதனை மக்களுக்கு எடுத்துக் கூறி, எங்களுடைய மக்களை எமது கட்சியினுடைய கொள்கையின் பாதையில் நமது அரசியல் தீர்வை அடையும் வரையும், அரசியல் தீர்வை அடைந்ததன் பிற்பாடும் நாங்கள் செயல்படுவோம்.

பிரதானமாக இந்த கட்சியினுடைய உருவாக்கம் தமிழ் மக்களினுடைய அரசியல் உரிமை பெறுவது தான், அரசியல் உரிமை கிடைக்கும் வரைக்கும் இன்னமும் இந்தக் கட்சியை பலப்படுத்த வேண்டிய தேவை தற்பொழுது கட்சியினுடைய அனைத்து உறுப்பினர்களுக்கும் இருக்கின்றது.

பிரதானமாக இலங்கை தமிழரசுக் கட்சியுடைய மாநாடு மிக விரைவாக நடத்தப்பட வேண்டும் என நான் நினைக்கின்றேன்.

கட்சியினுடைய மாநாடு இடம்பெற வேண்டிய காலப்பகுதி எப்போதோ முடிந்து விட்டது பல காரணங்களினால் கட்சியினுடைய மாநாடு நடைபெறாமல் இருப்பது ஒரு கவலையான விடயம்.

கட்சியினுடைய மாநாடு இடம்பெறுவதன் ஊடாக கட்சியினுடைய எதிர்கால திட்டங்களை இன்னமும் நாங்கள் சிறப்பாக செய்து கொள்ளக்கூடிய சூழல் அமையும்.

அந்த அடிப்படையில் நாங்கள் மிக விரைவில் திகதியினை அறிவித்து மாநாட்டினை நடத்தி தந்தை செல்வாவின் கொள்கைகளை இன்னமும் தீவிரமாக எங்களுடைய மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதனை இந்த 125 வது பிறந்த தினத்தில் கூற விரும்புகின்றேன்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.


புதியது பழையவை