ஸஹ்ரானின் மனைவி பிணையில் விடுதலை



பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதாகி கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை
பிணையில் விடுவிக்க அம்பாறை கல்முனை மேல் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி மீதான வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோதே இவ்வாறு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வழக்கானது விசாரணைக்காக எடுக்கப்பட்ட வேளை பிரதிவாதியான ஸஹ்ரானின் மனைவி சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி ரூஸ்தி ஹபீப் தலைமையில்
சட்டத்தரணிகளான றிஸ்வான் உவைஸ், அர்சாத் குழுவினர் ஆஜராகி இருந்தனர்.

விசாரணையின் போது சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் வழக்கினை நெறிப்படுத்திய அரச சட்டவாதி லாபீர் நெறிப்படுத்தலுடன்
ஸஹ்ரானின் மனைவியினால் ஏற்கனவே வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல்வாக்குமூலம் தொடர்பில் ஆட்சேபனை எழுப்பப்பட்டு பிரதிவாதியின் சட்டத்தரணிகளினால் நீண்ட நேர
சமர்ப்பணங்கள் விண்ணப்பங்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும் ஸஹ்ரானின் மனைவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அது தொடர்பில் எடுக்கப்பட்ட வாக்குமூலங்களும் எவ்வாறு எடுக்கப்பட்டது
தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டதுடன் வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றன.


தொடர்ந்து பிணைக்கோரிக்கை மற்றும் ஏன் பிணை வழங்கப்பட வேண்டும் என பிரதிவாதி சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பங்களை சுட்டி காட்டி சமர்ப்பித்தனர்.
இதன்போது சுமார் 4 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட விடயத்தை விசேட காரணியாக ஏற்றுக்கொண்டும் இதர காரணங்களை முன்வைத்தும் பிணை வழங்கப்பட வேண்டும் என விசேட கோரிக்கையை பிரதிவாதியின் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியதை அடுத்து பிணை கோரிக்கை மன்றில் ஏற்றுக்கொள்ளப்பட்டு கடும் நிபந்தனைகளுடன் பிணை
வழங்கப்பட்டது.
புதியது பழையவை