அதிக அளவில் காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் ஒரு மாவட்டமாகக் கிளிநொச்சி மாவட்டம் காணப்படுவதாகக் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (18.03.2023) கிளிநொச்சியில் நடைபெற்ற அரச காணிகள் தொடர்பான இலவச சட்ட உதவ நடமாடும் சேவையில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இடப் பெயர்வுகள் மற்றும் மீள் குடியமர்வின் பின்னரான செயற்பாடுகளில் அதிக அளவில் காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் ஒரு மாவட்டமாகக் கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றது.
உதவிகளைப் பெற வேண்டிய தேவை
இவ்விதமான பிரச்சினை மக்களிடையே பாரிய ஒரு பிரச்சினையாகவும் மாறியுள்ளது. பல்வேறு வேலைத் திட்டங்களின் ஊடாக மக்களின் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கியுள்ள போதும் இன்னும் பல பிரச்சினைகள் தீர்க்க முடியாத நிலையில் காணப்படுகின்றன.
அதிலும் சட்ட ஏற்பாடுகள் சட்டம் சார்ந்த இருக்கக்கூடிய பிரச்சினைகளால் மக்கள் திருப்தியடையக்கூடிய பதில்களை வழங்க முடியாத நிலை காணப்படுகிறது.
இவ்விதமான பிரச்சினைகளுக்குச் சட்ட உதவிகளைப் பெற வேண்டிய தேவை மக்களுக்கு உள்ளது. இவ்வாறானவர்களுக்கு இது போன்ற சட்ட உதவிகளை வழங்குவது மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நினைவுச் சின்னம்
இலங்கை சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் இந்து மகாணசபை ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சட்டக் கல்லூரி மாணவர்களால் அரச அதிபருப்பான நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் பாரதி சட்டவரைஞர் திணைக்களத்தின் பிரதி சட்டவரைஞர் செல்வ குணபாலன் இந்து மகா சபையின் சட்ட மாணவர்கள் பொதுமக்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.