கடந்த 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை பிரான்சிலுள்ள பாரிசு நகரில் நடைபெற்ற சூழல் மாசடைதல், பிளாஸ்ரிக் பாவனையால் ஏற்படும் தீமைகள், நாகரிகப் போர்வையில் அநியாயமாக கழிவுகளுக்குள் உள்ளாகும் உடைகள் மூன்றாம் உலகநாடுகளின் பாவனைக்கு வழங்குதல், உயிர்கள் மீதான பாதுகாப்பு என பல்வேறு மனிதகுலத்திற்கு அவசியமான விடயங்களை கருத்தில் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மரதன் ஓட்ட நிகழ்வில் 15 ஆயிரம் வரையிலான பிரெஞ்சு மற்றும் பல்லின மக்கள் பங்குபற்றியிருந்தனர்.
அதில் ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதியாக இரண்டு பிள்ளைகளின் தாயார் திருமதி. பிரவீனா நிமால் பங்கு பற்றியதுடன், 10 கிலோமீற்றர் தூரத்தை முழுமையாக ஓடித் தமிழினத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவரின் மனத்திடம் கொண்ட ஓட்டத்தினால் சிறப்பாக பேற்றினைப் பெற்றுக்கொண்டதோடு, அதற்கான சிறப்புப் பரிசினையும் பதக்கத்தையும் ஏற்பாட்டாளர்களிடம் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் பாரிசின் மத்தியில் ஆரம்பித்த இந்த மரதன் ஓட்டம் பாரிசின் சர்வதேச உதைபந்தாட்ட மைதானத்தில் நிறைவடைந்தது.
இந்த விழிப்புணர்வு செயற்பாட்டில் முதற்தடவையாக திருமதி. பிரவீணா ஈடுபட்டதும் தனது திடமான உறுதியான செயற்பாட்டை இறுதிவரை செய்து முடித்தது உடல் ரீதியாக களைப்பைக் கண்டிருந்தாலும் மனதாலும், தனது நோக்கத்திலும், விருப்பத்திலும் உறுதியாக இருந்ததை அவரின் பேச்சில் காணக்கூடியதாக இருந்தது.
நிகழ்வின் முடிவில் இவருடன் பேசியபோது தனது நீண்டகால விருப்பம் நிறைவேறியதும், இதற்கு பெரும் உந்து சக்தியாக இருந்த பெற்றோர், மற்றும் துணைவருக்கும் நன்றியைத் தெரிவித்ததோடு, பெண்களால் எதனையும் சாதிக்க முடியும், பெண் என்பவள் வீட்டுக்குள் முடங்கி குடும்பம், சுற்றம் என்பதைக் கடந்து இவ்வாறான மனிதநேயப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
பெண்களால் எதையும் சாதிக்க முடியும் சாதிக்க வேண்டும் என்பதன் ஓர் உதாரணமாகத் தான் இன்று நின்று கொண்டிருப்பதாகவும் கூறினார். முதற்தடவையாகவே தான் இதில் துணிவுடனும், மனத்திடமாகவும் பங்கு பற்றியுள்ளேன்.
இனிவரும் காலங்களில் இங்கு வாழும் தமிழ்ப் பெண்கள், இளையவர்கள் பங்கெடுத்து ஈழத்தமிழ் பெண்களுக்கு பெருமை சேர்க்க முன்வரவேண்டும். வருவார்கள் என்ற நம்பிக்கை கொள்கின்றேன்' என திருமதி. பிரவீனா நிமால் தெரிவித்துள்ளார்.