மட்டக்களப்பில் சட்டவிரோதமாக காணிகளை அபகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்மொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பார்ட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் பொது மக்களால் இன்று (30.03.2023) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் புறந்தள்ளி மக்களின் பிரச்சினைகளை கணக்கில் எடுக்காது நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தமது வயல் காணிகளை விட்டுக்கொடுக்க முடியாது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மயிலத்தமடு, மாதவனை பிரதேச பண்ணையாளர் பிரச்சினை, மணல் அனுமதிப் பத்திரம் வழங்கல் தொடர்பான பிரச்சினைகள், வாகரை கடற்தொழிலாளர்கல் பிரச்சினை, காணிகளை தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக ஆராய வேண்டிய மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இவற்றை எல்லாம் கணக்கிடாது பிரச்சினைகளை தெரிவிக்க வந்த பொதுமக்களையும் , பொதுமக்களுக்காக குரல் கொடுக்க வந்த இராஜாங்க அமைச்சர் வியாளேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் ஊடகவியலாளர்களை என மாவட்ட செயலகத்திற்கு வெளியே வைத்து பூட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பிள்ளையானும், மாவட்ட அரசாங்க அதிபர், அதிகாரிகளும் இணைந்து அபிவிருத்தி குழு கூட்டத்தை நடத்தியதால் மாவட்ட செயலகத்திற்கு வெளியே பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.