உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் முக்கிய தீர்மானம்!உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று (23.03.2023) இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

வாக்குச்சீட்டு கிடைக்கப்பெறாமை மற்றும் தேர்தலை நடத்துவதற்கு ஏற்பட்டுள்ள தடை என்பன குறித்து கலந்துரையாடவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அஞ்சல் மூல வாக்களிப்பு
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பை எதிர்வரும் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அஞ்சல் வாக்குச்சீட்டுக்களை கடந்த, 21ஆம் திகதி அஞ்சலகங்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்துவதற்கான திகதி
அத்துடன், எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை திட்டமிட்ட வகையில் நடத்த முடியுமா என்பது குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான நிதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அண்மையில் அறியப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை