மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் மதமாற்ற பிரசார கூட்டம் நடத்த சைவ அமைப்புக்கள் எதிர்ப்பு!மட்டக்களப்பு இந்துக் கல்லூரி, இந்துக்களின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ள நிலையில், மத மாற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் அமைப்பொன்று, மத மாற்ற பிரசார கூட்டமொன்றை மட்டக்களப்பு கல்லூரி மைதானத்தில் நடாத்த அனுமதி வழங்கப்பட்டமைக்கு சைவ அமைப்புக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.

எதிர்வரும் 24,25 மற்றும் 26ம் திகதிகளில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில், மத பிரசாரக் கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக, துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த துண்டுப் பிரசுரங்களை வெளியிட்ட மத ஸ்தாபனம், மத மாற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக சைவ அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து வரும் நிலையில், அதனை ஊக்குவிக்கும் முகமாக மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானம் வழங்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி அதிபரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, மத பிரசார கூட்டத்திற்கு பாடசாலை மைதானத்தை வழங்குமாறு, அரசியல்வாதிகளின் அழுத்தத்தின் மத்தியில், கல்வித் திணைக்கள உயரதிகாரிகள்,
கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் கல்லூரி அபிவிருத்திக் குழுவினருடன் கலந்துரையாடப்பட்டே மைதானத்தை வழங்கும் முடிவு எட்டப்பட்டதாக குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமாரையும் எமது செய்திப் பிரிவு தொடர்புகொண்டு கேட்டபோது, பிரதமர் செயலகத்தினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே இவ் மைதானம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விளக்கங்களை கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடிபின்னர் வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, மட்டக்களப்பு இந்துக் கல்லூரி ஆசிரியரொருவரினால், மத பிரசார கூட்டத்திற்கு கல்லூரி மைதானத்தை வழங்குமாறு பிரதமர் செயலகத்தால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடிதத்தின் பிரதியொன்று எமது அலுவலகச் செய்தியாளரிடம் கையளிக்கப்பட்டது.

பிரதமர் அலுவலகத்தால் அனுப்பி வைக்கப்பட்டதாக எமது அலுவலகச் செய்தியாளரிடம் கையளிக்கப்பட்ட கடித பிரதி சிங்கள மொழியில் காணப்பட்ட நிலையில், அதனை மொழிமாற்றம் செய்தபோது, மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தைக் கட்டாயமாக வழங்க வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு பணிக்கப்படவில்லை என்பதும், பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறே கூறப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

பிரதமர் அலுவலகம் பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறும், நிகழ்வுக்கு மைதானத்தை வழங்குமாறு கூறாத போதிலும், சைவ அமைப்புக்கள் நீண்ட காலமாக எதிர்ப்பைக் காட்டி வரும், மத மாற்ற பிரசாரங்களை முன்னெடுக்கும்அமைப்பொன்று நடாத்தும் மத பிரசாரக் கூட்டத்திற்கு, சைவ அடையாளங்களைப் பிரதிபலிக்கும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானம் ஏன் வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதியது பழையவை