தமிழரசுக் கட்சியின் எம்.பி சுமந்திரன் ஒரு பொய்யுரைஞர் என விமர்சித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம், சுமந்திரனை, இரா.சம்பந்தன் சந்திக்க மறுத்துள்ளதை மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலா, தனது முகநூலில் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.’தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடவில்லை என சுமந்திரன் பொய்களை கூறி வருகின்றார்.
அவர் ஆரம்பத்திலிருந்தே பொய்களைத்தான் கூறிவருபவர். 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராக சுரேஸ் பிரேமச்சந்திரன் இருந்தார். 2015 முதல் 2020 வரை சுமந்திரன் கூட்டமைப்பின் பேச்சாளாராக இருந்தார்.
2020 தேர்தலுக்குப் பின்னர் கூட்டமைப்பின் பேச்சாளராக யாருமே நியமிக்கப்டவில்லை. இது தொடர்பில் ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தோம் ஆனால் சில ஊடகங்கள் சுமந்திரனிற்காக ஊடகப் பேச்சாளர் என்ற அடைமொழியைப் பயன்படுத்தின. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறி விட்டது.
தமிழரசுக் கட்சி வெளியேறும் முடிவு, அக் கட்சியின் களுவாஞ்சிக்குடி மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டு, இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவிலும் அறிவிக்கப்பட்டது.
நாம் தமிழரசுக் கட்சி தனித்துப் போகாது, அனைவரும் ஒன்றாக தேர்தலில் போட்டியிடுவோம் என ஆலோசனை கூறினோம். அதை மறுத்த சுமந்திரன், எம்மை தனித்தனியே போட்டியிடுமாறு கோரினார்.
தமிழரசுக் கட்சி வேண்டுமெனில் தனித்துப் போட்டியிடலாம், நாம் தேர்தலில் போட்டியிடாமலும் ஒதுங்கியிருப்போம், அல்லது வேறு எவ்வாறான வகையிலாவது போட்டியிடுவோம் ஆகவே எமக்கு உங்களது ஆலோசனை தேவையில்லை என பகிரங்கமாக இரா.சம்பந்தன் முன்னிலையில் கூறினோம்.
அப்போது இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியை அழிக்கப் போகின்றீர்களா என எம்மை நோக்கிக் கேட்டார் ‘ஐயா தமிழரசுக் கட்சியின் அழிவு உங்கள் கைகளில்தான் உள்ளது’ என பதிலளித்தோம். அண்மையில் தமிழரசுக் கட்சியின் எம்.பியொருவர் இரா.சம்பந்தனை சந்திக்கச் சென்றபோது, இரா.சம்பந்தன் மறுப்புத் தெரிவித்ததாக நான் முகநூலில் பதிவிட்டேன்.
நான் இட்ட பதிவுக்கு பதிலளித்த சுமந்திரன், தான் இரா.சம்பந்தனோடு 1 மணி நேரம் உரையாடியதாக மறு பதிவொன்றை இட்டார். ஆனால் தமிழரசுக் கட்சியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அக் கட்சியை சார்ந்த, மாமனிதர் இரவிராஜின் மனைவி, சசிகலா ரவிராஜ், தனது முகநூல் பதிவொன்றில் சுமந்திரனை இரா.சம்பந்தன் சந்திக்க மறுத்ததை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார்.